கரைந்த நிழல்கள்: எளியவர்கள் மீதான கரிசனம்

Read this essay in English here.


தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி, நல்லவர்கள் எவ்வளவு தூரம் சிரமங்களை அனுபவித்தாலும், கெட்டவர்களால் துன்புறுத்தப்பட்டாலும், கடைசியில் எப்படியாவது நீதி வென்றுவிடும். வெற்றி நல்லவர்களுக்கே கிடைக்கும். இதுதான் காப்பியங்களும் புராணங்களும் நமக்கு உணர்த்தக்கூடிய செய்தியாக இருக்கிறது. இந்த மரபின் நீட்சியாகத்தான் தமிழ் சினிமா நாயகர்கள், அநீதிக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டுபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆனால் யதார்த்தத்தில் மனிதர்கள், அன்றாடம் அல்லல் படுபவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பன்னெடுங்காலமாகவே இந்த உலகம் வலிமையானவர்களுக்கு மட்டுமானதாகவே இருக்கிறது. தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போன்ற “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” த்தனமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை. பிரச்சனைகளுடன் போராடுவதிலேயே தங்கள் பெரும்பகுதி வாழ்நாளைக் கழிப்பவர்கள் இங்கு அனேகம். இந்த உண்மையைப் பதிவு செய்வதன் வழியாகத்தான் இலக்கியங்கள் ஒரு  மகத்தான நிலையை அடைகின்றன. இருத்தலியல் தத்துவத்தின் எழுச்சிக்குப் பிறகு பெரும்பாலான இலக்கியங்கள் மனித வாழ்வின் வீழ்ச்சிகளைப் பதிவு செய்துவரும் நிலையில், சினிமாவில் பணியாற்றும் மனிதர்களினூடே இந்த உலகத்தின் அசலான அவலத்தைப் பேசும் நாவலாக அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் இருக்கிறது.

படம்: படியெடுத்தல்

சில கதாபாத்திரங்களை மட்டுமே மையமாகக் கொண்டிராமல், விரிவடைந்த தன்மையில் பல மனிதர்களின் அனுபவங்களைத் தொகுத்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் அசோகமித்திரன். நாவலின் தொடக்கம் ஒரு திரைப்பட ஸ்டுயோவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு நிகழக்கூடிய தயாரிப்புப் பணிகளைக் காட்சிப்படுத்துகிறது. அன்றைய திரைப்படங்களின் உருவாக்கத்தில் மேனேஜர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நடராஜன் கதாபாத்திரம் நமக்கு உணர்த்துகிறது. ஒருபுறம் இவர்களைப் போன்ற மேனேஜர்களுக்கு அங்கீகாரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. மற்றொரு புறம் பணத்தோடு புழங்கக்கூடிய வேலையைச் செய்து வந்தாலும், அவர்கள் வறுமையில்தான் வாழ்கிறார்கள். இந்த இருவேறு நிலைகளும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக அடுத்த அத்தியாயத்தில் படத்தின் நாயகியான ஜயசந்திரிகா படப்பிடிப்பிற்கு  வராததால் ஏற்படும் குழப்பங்களை நாவல் விவரிக்கிறது. அந்த ஸ்டுடியோவில் பெரும் ஆளுமை செலுத்தக்கூடிய இடத்தில் இருந்த நடராஜன், ஜயசந்திரிகாவின் செயல்களால் தன் வாழ்க்கையையே இழப்பது துயரத்தின் சாட்சியாகும். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், சில நிமிடக் காட்சிகளுக்கு ஜயசந்திரிகா திடீரென நடிக்க மறுத்துவிடுகிறாள். படம் முடங்கிவிடுகிறது. நடராஜனைப் போன்ற பலரும் வேலையிழந்து, வருமானத்திற்கு வழியில்லாமல் போகிறார்கள். இது போலத் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைக்காமல் நடிகர்கள் இழுத்தடிப்பது தமிழ் சினிமாவில் இன்று வரை தொடர்கிறது.

அதன் பிறகு அந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜகோபாலின் வாழ்க்கைக்கு நாவல் நகர்கிறது. வேலை தேடிக்கொண்டிருக்கும் காலத்தில் அவனைத் தேடிவரும் ஒரு விருந்தாளியுடன் பேச நேரிடுகிறது. சராசரியான மனித வாழ்வை வாழாமல், தங்கள் ரசனை சார்ந்த கனவுகளை நோக்கி ஓடத் துடிப்பவர்களை இந்தச் சமூகம் எப்படியெல்லாம் அவமதிக்கிறது என்பதற்கு அந்த விருந்தாளியுடனான ராஜகோபாலின் உரையாடல் ஒரு சான்று.

உதாரணமாக, அந்த விருந்தினர் ராஜகோபாலனைப் பார்த்து “ஏம்பா, நீயும் உங்க அண்ணா மாதிரி ஏதாவது கம்பெனியில சேர்ந்திருக்கக்கூடாது?” என்று கேட்கிறார்.

எதையாவது சொல்லிச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக “இப்போது ட்ரை பண்ணிண்டு தானிருக்கிறேன்” என்று மழுப்புகிறான் ராஜகோபாலன்.

அப்போதும் அவனை விடாமல் “ஒனக்கு இப்போ வயசு முப்பத்தி நாலு ஆறாப்பலே இருக்கே? பாக்கணும், கொஞ்சம் கஷ்டம்தான்” என்கிறார் அந்த விருந்தினர்!

ராஜகோபாலன் தன் சினிமா நண்பர்களைச் சந்திக்கச் செல்லும் காட்சிகள், சினிமாத் துறையில் வேலை செய்பவர்களின் நிச்சயமற்ற தன்மையை வாசகனுக்குக் கடத்துகின்றன. மேலும், அவன் அவர்களைத் தேடிச் செல்லும் இடங்களில் அன்றைய சென்னை குறித்த சிறந்த வர்ணனைகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, கோடம்பாக்கத்தில் இருந்து ராயப்பேட்டைக்குச் செல்வதை “மெட்ராசுக்குப் போறேன் ” என்று கூறுவது, இன்றைய சென்னை மாநகரத்தில் வாழும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

சட்டென்று நாவல் அடுத்த அத்தியாயத்தில், ராம ஐயங்கார் என்பவரின் விநாயகா ஸ்டுடியோஸை விவரிக்கிறது. அங்கு சிமென்ட் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்காக ஓர் அறையினுள் நுழையும்போது, பழைய திரைப்படம் ஒன்றின் கோப்புகள், படச்சுருள்கள், கிளாப் போர்டு போன்றவை பாழடைந்த நிலையில் கிடைக்கின்றன. ஜயசந்திரிகா புண்ணியத்தில் கைவிடப்பட்டவைதான் அவை!

தமிழ், இந்தி என்று கொடிகட்டிப் பறக்கும் ராம ஐயங்காருக்காவது நிம்மதி உள்ளதா? அது எப்படித் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவன் வடக்கில் திரைப்படங்கள் வெளியிடலாம் என்று பம்பாயில் அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ராம ஐயங்காருக்குச் சிக்கல் ஏற்படுகிறது. இந்த நாவல் எழுதப்பட்டு ஐம்பதாண்டுகள் கடந்தாயிற்று. இத்தகைய அடிப்படைவாதமும், இனவாதமும், மதவாதமும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நாவலில் தன் திறமையால் ஓரளவு முன்னேறும் கதாபாத்திரம் சம்பத் மட்டுமே. ஆனால் அவனது முன்னேற்றமும் நிலையானது அல்ல என்பதைக் குறிக்கும் விதத்தில்தான் இறுதியில் சில பக்கங்கள் எழுதப்பட்டிருக்கும். தன்னுடைய பழைய மேனேஜர் நடராஜனைத் தேடிச் செல்லும் சம்பத், அவரது பரிதாப நிலை கண்டு பெரும் வேதனை அடைகிறான். நடராஜனும் சம்பத்தும் ஒரு விதத்தில் ஒன்றுதான். நாவலின் ஆரம்பத்தில் நடராஜனும் இறுதியில் சம்பத்தும் ஆளுமை செலுத்தக் கூடியவர்களாக வருகிறார்கள். ஆனால் சம்பத்துக்கும் பின்னாளில் நடராஜனின் நிலை ஏற்படலாம் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது. சினிமா என்னும் மாயச் சுழலில் சிக்கிச் சீரழியும் மனிதர்கள் பற்றிய ஆழமான குறியீடு அது!

சினிமாத் துறை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் போன்றவர்கள்தான். திரைத்துறையைப் பற்றிப் பேசும் மிகச் சில தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றான வெள்ளித்திரை திரைப்படத்தில்கூட நடிகர்கள், இயக்குநர்கள் சார்ந்த வாழ்க்கைதான் மேலதிகமாகப் பிரதிபலிக்கப்பட்டிருக்கும். மேலும், இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த அந்தக் காப்பியத் தன்மையில்தான் அத்திரைப்படத்தின் கதையும் நகரும். ஏனெனில், கதை முழுதும் சிரமங்களை அனுபவித்து, அவமானங்களைச் சந்தித்து, பிறரால் ஏமாற்றங்களுக்கு உள்ளாகும் கதாநாயகன், இறுதியில் தன் உழைப்பின் மூலமாகவும் திறமையின் மூலமாகவும் வென்றுவிடுகிறான். சொல்லப்போனால் அந்த முடிவை நோக்கித்தான் கதை நகர்த்தப்பட்டிருக்கும். கதாநாயகன் இயக்குநராக முயற்சி செய்பவன். அவனை ஏமாற்றுபவன் ஒரு நடிகன். அவனுக்குக் கருணையுடன் வாய்ப்பு கொடுப்பவர் ஒரு தயாரிப்பாளர். அவனைக் காதலிப்பவள் ஒரு நடிகை. சுற்றிச் சுற்றி இத்தகைய மேட்டுக்குடி மனிதர்களையே அக்கதை சார்ந்திருக்கும். சினிமாத்துறையில் பங்களிப்பாற்றும் ஏனைய தொழிலாளர்களின் வாழ்க்கை குறைந்த அளவில்தான் அத்திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

ஆனால் கரைந்த நிழல்கள் அடிமட்டத்தில் பணியாற்றும் மேனேஜர், குரூப் டான்சர்கள், உதவி இயக்குநர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் மீது நமக்குக் கரிசனத்தை ஏற்படுத்துகிறது. மேலும், மேட்டுக்குடியில் இருப்பவர்கள் செய்யும் அற்பத் தவறுகளால் கீழே உள்ள மனிதர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பேசும் விதத்தில் ஒரு பொதுவுடைமைத் தன்மையை அடைகிறது. அந்தக் காலத்தில் நிலவிய தண்ணீர்ப் பஞ்சம், சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்துவதில் இருந்த சிக்கல்கள், சமகால அரசியல் எனப் பல விஷயங்கள் சம்பவங்களினூடே வெளிப்படுகின்றன. மனித வாழ்வு குறித்த ஆழமான சித்திரத்தை முன் வைக்கிறது கரைந்த நிழல்கள்.

குறிப்புகள்

  1. இருத்தலியல்: ஒரு சிறிய அறிமுகம் 
  2. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
  3. அசோகமித்திரன் குரல் – தி இந்து

Images may not be reproduced without permission.


எழுத்தாளரைப் பற்றி

அதியன் நல்ல இலக்கியங்கள், சினிமாக்கள், இசை போன்றவை மீது பிரியம் கொண்டவன். அபுனைவுகளில் அரசியலையும் வரலாற்றையும் வாசிப்பதில் ஈடுபாடு உண்டு. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” கூற்றுப்படி எந்தவித அடையாளங்களுக்குள்ளும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் வாழ விரும்பிகறவன்.